அல்லாஹ்வுடைய பாதுகாப்பு – ஒரு முஃமினின் வாழ்க்கையின் அடித்தளம்


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ
அல்லாஹ்வுடைய பேரருளால், அன்பும் சகோதரத்துவமும் நிறைந்த ஒரு சூழலில், இவ்வாறு நாம் ஒன்றாக கூடும் வாய்ப்பை அல்லாஹ் நமக்கு அளித்திருக்கிறார். இது நம்முடைய தகுதியால் அல்ல; முழுக்க முழுக்க அல்லாஹ்வுடைய அருளால்தான். இந்த வாழ்க்கை என்பது சோதனைகளும், இன்பங்களும், கஷ்டங்களும் மாறி மாறி வரும் ஒரு தற்காலிகமான பயணம். சில நேரங்களில் அல்லாஹ் நமக்கு இன்பத்தை அளிக்கிறான்; சில நேரங்களில் கஷ்டத்தை அளிக்கிறான். ஆனால் உண்மையில் இவை இரண்டும் சோதனைகள்தான்.
அல்லாஹ் கொடுக்கும் இன்பமும் சோதனைதான்.
அல்லாஹ் கொடுக்கும் கஷ்டமும் சோதனைதான்.
இந்த வாழ்க்கையில் ஒரு முஃமின் அல்லாஹ்விடத்தில் எதிர்பார்க்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அல்லாஹ்வுடைய பாதுகாப்பு. அல்லாஹ்வுடைய பாதுகாப்பு ஒரு மனிதனுக்கு இருக்கிறது என்பதற்கான மிகப் பெரிய அடையாளம் என்னவென்றால், அந்த மனிதனை அல்லாஹ் பாவங்களிலிருந்து பாதுகாப்பான்.
ஒரு மனிதனை அல்லாஹ் பாவம் செய்ய விடாமல் தடுக்கிறானென்றால், அவன் அல்லாஹ்வுடைய பாதுகாப்புக்குள் இருக்கிறான் என்பதற்கான தெளிவான சான்று அதுவே. ஆனால் ஒரு மனிதன் பாவங்களில் ஈடுபட ஆரம்பிக்கிறான் என்றால், அவன் அல்லாஹ்வுடைய பாதுகாப்பிலிருந்து மெதுவாக விலகிக்கொண்டு இருக்கிறான் என்பதுதான் உண்மை.

அல்லாஹ்வுடைய பாதுகாப்பு என்றால் என்ன?


பல பேர் நினைக்கிறார்கள் அல்லாஹ்வுடைய பாதுகாப்பு என்றால் எதிரிகள் வராமலிருப்பது, நோய் வராமலிருப்பது, விபத்து நடக்காமலிருப்பது என்று. ஆனால் அல்லாஹ்வுடைய பாதுகாப்பின் அடித்தளம் அது அல்ல.
அல்லாஹ்வுடைய பாதுகாப்பின் அடித்தளம் – பாவத்திலிருந்து பாதுகாப்பு.
ஒரு மனிதன் பாவம் செய்ய ஆரம்பிக்கும்போது, அவன் தானாகவே அந்த பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறுகிறான். அதனால் தான், சோதனைகள் அவனை வலுவாக தாக்குகின்றன. அவன் திரும்ப அல்லாஹ்விடம் திரும்பி, பாவத்தை விட்டு வெளியேறும்போது, மீண்டும் அல்லாஹ்வுடைய பாதுகாப்புக்குள் நுழைகிறான்.


உஹது போர் – பாதுகாப்பு நீங்கிய ஒரு தருணம்

உஹது போர்க்களத்தில் அல்லாஹ்வுடைய பாதுகாப்பு தெளிவாக இருந்தது. மலக்குகள் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களோடு சேர்ந்து போரிட்டுக் கொண்டிருந்தார்கள். சஹாபாக்கள் அல்லாஹ்வுடைய பாதுகாப்புக்குள் இருந்தார்கள்.
ஆனால் என்ன நடந்தது?
சில சஹாபாக்கள் உலக ஆசையால், ரனீமத்துப் பொருளை நோக்கி, அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைக்கு விளக்கம் கொடுத்து, அந்த மலையை விட்டு கீழே இறங்கினார்கள். அது ஒரு பாவம். அந்த ஒரு செயலின் காரணமாக அல்லாஹ் என்ன செய்தான்?



அல்லாஹ்வுடைய பாதுகாப்பை நிறுத்திவிட்டான்.



உதவி தேவைப்பட்டது அல்ல; பாதுகாப்பு தேவைப்பட்டது. எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு இல்லாதபோது, உதவி கூட பயனளிக்கவில்லை. இதுதான் அடித்தளம்


யார் அல்லாஹ்வுடைய பாதுகாப்பில் இருப்பார்?


இன்னல்லாஹு தஆலா ஈமான் கொண்ட அடியார்களை அல்லாஹ் பாதுகாப்பான். வானமும் பூமியும் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து அவனுக்கு எதிராக நின்றாலும், அல்லாஹ் அவனை பாதுகாக்க நாடிவிட்டால், யாராலும் எதுவும் செய்ய முடியாது.
மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து உங்களுக்கு நலவு செய்ய முயன்றாலும், அல்லாஹ் நாடாவிட்டால் அது நடக்காது. அதேபோல், மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து உங்களுக்கு தீங்கு செய்ய நினைத்தாலும், அல்லாஹ் நாடாவிட்டால் அது உங்களைத் தொடவும் முடியாது.
இதுதான் உண்மையான தவ்ஹீத்.
லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்.

யூனுஸ் (அலை) – பாதுகாப்பு மீண்டும் கிடைத்த தருணம்

நபி யூனுஸ் (அலைஹிஸ்ஸலாம்) ஒரு கட்டளையை நிறைவேற்றாமல் விலகியதன் காரணமாக, அல்லாஹ்வுடைய சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ஒரு மீனுடைய வயிற்றுக்குள், முழு இருளில், எந்த உதவியும் இல்லாத நிலையில் சிக்கிக் கொண்டார்கள்.
அந்த இருளில் அவர்களுக்கு புரிந்தது ஒன்றே ஒன்று

அல்லாஹ்வுடைய பாதுகாப்பு இல்லாமல் வெளியே வர முடியாது

உடனே அவர்கள் என்ன செய்தார்கள்?
“லா இலாஹ இல்லா அந்த, சுப்ஹானக, இன்னி குன்து மினழ் ழாலிமீன்.”
இந்த தவ்பாவின் மூலமாக, அல்லாஹ்வுடைய பாதுகாப்பு மீண்டும் வந்தது. மீனுடைய வயிற்றில் இருந்தாலும், அல்லாஹ் அவர்களை பாதுகாத்தான். மீன் கூட அவர்களைத் தீண்டவில்லை. அல்லாஹ் அவர்களை பாதுகாப்புடன் வெளியே கொண்டு வந்தான்.
இது நமக்கு ஒரு மிகப் பெரிய பாடம்.
•சோதனை வந்தால், அது பாவத்தின் காரணமாக இருக்கலாம்.
•அல்லாஹ்விடம் திரும்பினால், பாதுகாப்பு திரும்பும்.

ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் பாதுகாப்பு துஆ


அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் காலையிலும் மாலையிலும் தொடர்ந்து ஒரு துஆ ஓதுவார்கள்:
“யா அல்லாஹ்! என்னை மேலிருந்து பாதுகாத்துக் கொள்.
யா அல்லாஹ்! என்னை கீழிருந்து பாதுகாத்துக் கொள்.
யா அல்லாஹ்! என் வலப்புறத்திலிருந்து பாதுகாத்துக் கொள்.
யா அல்லாஹ்! என் இடப்புறத்திலிருந்து பாதுகாத்துக் கொள்.
யா அல்லாஹ்! என் முன்னால் பாதுகாத்துக் கொள்.
யா அல்லாஹ்! என் பின்னால் பாதுகாத்துக் கொள்.”
இது ஒரு முஃமினின் வாழ்க்கையில் மிக முக்கியமான துஆ.

அல்லாஹ்வுடைய நிரந்தர பாதுகாப்பில் வாழ்வது எப்படி

ஒரு முஃமினின் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆசை என்ன தெரியுமா? பணம், புகழ், பதவி, உலக வெற்றி அல்ல. அல்லாஹ்வுடைய பாதுகாப்பில் வாழ வேண்டும் என்பதுதான். ஏனெனில் அல்லாஹ்வுடைய பாதுகாப்பு இருக்கிறது என்றால், அந்த மனிதன் உலகத்திலும் பாதுகாப்பில் இருப்பான்; மறுமையிலும் பாதுகாப்பில் இருப்பான்.
ஒரு மனிதன் தனியாக இல்லை. அவன் எப்போதும் அல்லாஹ்வின் பார்வையில் இருக்கிறான். அவன் நடக்கும் ஒவ்வொரு படியும், பேசும் ஒவ்வொரு வார்த்தையும், நினைக்கும் ஒவ்வொரு எண்ணமும் அல்லாஹ்விற்கு தெரிந்ததே. இந்த உணர்வு ஒரு முஃமினின் உள்ளத்தில் இருக்கும்போது, அவன் தானாகவே பாவத்திலிருந்து விலக ஆரம்பிக்கிறான்.

அல்லாஹ் அருகில் இருப்பதின் உண்மை

அல்லாஹ் நமக்கு நெருக்கமாக இருக்கிறான். இது ஒரு கவிதை அல்ல; இது குர்ஆனின் உண்மை.

“அடியானிடம் நாம் அவனுடைய கழுத்து நரம்பை விடவும் நெருக்கமாக இருக்கிறோம்.”
(திருக்குர்ஆன்)
இந்த வசனம் ஒரு முஃமினின் உள்ளத்தை நடுங்கச் செய்யும். நாம் தனியாக இல்லை. யாரும் பார்க்கவில்லை என்று நினைக்கும் அந்த தருணத்திலும் அல்லாஹ் நம்முடன் இருக்கிறான். இந்த உணர்வு ஒரு மனிதனுக்குள் வந்துவிட்டால், அவனுடைய வாழ்க்கை முற்றிலும் மாறிவிடும்.

அல்லாஹ்வுடைய பாதுகாப்பு எப்படி கிடைக்கும்?

அல்லாஹ்வுடைய பாதுகாப்பு எவருக்கும் சும்மா கிடைக்காது. அதற்கும் சில அடிப்படை வழிமுறைகள் உள்ளன.

1)தொழுகையை பாதுகாத்தல்

ஒரு மனிதன் தொழுகையை பாதுகாக்கிறான் என்றால், அல்லாஹ் அவனை பாதுகாப்பான். குறிப்பாக ஃபஜ்ர் தொழுகை.

ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் கூறினார்கள்:

“யார் ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றுகிறாரோ, அவர் அல்லாஹ்வுடைய பாதுகாப்பில் இருக்கிறார்.”

ஃபஜ்ர் தொழுகையை அலட்சியப்படுத்துவது, அல்லாஹ்வுடைய பாதுகாப்பிலிருந்து வெளியேறுவது போன்றது. ஃபஜ்ர் தொழுகை என்பது ஒரு முஃமினின் பாதுகாப்பு கவசம்.

2)குர்ஆனுடன் உறவு

குர்ஆன் என்பது வெறும் ஓதுவதற்கான புத்தகம் அல்ல. அது பாதுகாப்புக்கான வழிகாட்டி.

குர்ஆன் கூறுகிறது:

“இது ஈமான் கொண்டவர்களுக்கு நேர்வழியும் பாதுகாப்பும் ஆகும்.”

ஒரு மனிதன் தினமும் குர்ஆன் ஓத ஆரம்பித்தால், அவனுடைய வீட்டிலும், வாழ்க்கையிலும் ஒரு மறைமுகமான பாதுகாப்பு இறங்கும்.

3(பாவங்களை விட்டு விலகுதல்

பாவம் என்பது பாதுகாப்பின் மிகப்பெரிய எதிரி. ஒரு பாவம் செய்தால், அந்த அளவுக்கு பாதுகாப்பு விலகுகிறது.

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:

“ஒரு பாவம் செய்தால், அது இன்னொரு பாவத்தை இழுத்து வருகிறது; ஒரு நன்மை செய்தால், அது இன்னொரு நன்மையை இழுத்து வருகிறது.”

4)துஆ – ஆயுதம்

துஆ என்பது முஃமினின் ஆயுதம்.

அல்லாஹ் விரும்பும் அடியான், அவனை அதிகமாக அழைப்பவன்.

ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் அடிக்கடி ஓதிய துஆ:

“யா அல்லாஹ், என் ஈமானையும் என் உயிரையும் பாதுகாத்துக்கொள்.”

5)தாய்–தந்தையருக்கு நல்லிணக்கம்

ஒரு மனிதன் தாய் தந்தையை மகிழ்வித்தால், அல்லாஹ் அவனை பாதுகாப்பான்.

ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் கூறினார்கள்:

“அல்லாஹ்வுடைய திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது.”

தாய் தந்தையின் துஆ என்பது ஒரு மனிதனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு.


மறுமையிலும் பாதுகாப்பு


அல்லாஹ்வுடைய பாதுகாப்பு உலகத்தோடு முடிந்துவிடுவதில்லை. அது மரணம், கப்ர், மஹ்ஷர், சிராத், சொர்க்கம் வரை தொடரும்.
கப்ரின் இருள்,
மலக்குகளின் கேள்விகள்,
மஹ்ஷரின் பயம்,
சிராத்தின் நுணுக்கம் –
இந்த எல்லா இடங்களிலும் அல்லாஹ் பாதுகாப்பு அளிப்பான்.
குர்ஆன் கூறுகிறது:
“நிச்சயமாக அல்லாஹ்வுடைய நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்

முடிவுரை

அன்புள்ள சகோதரர்களே, சகோதரிகளே,
இந்த உலகம் நிரந்தரம் அல்ல.
ஆனால் அல்லாஹ்வுடைய பாதுகாப்பு நிரந்தரம்.
அந்த பாதுகாப்பை இழக்காதீர்கள்.
பாவத்தை விட்டு விலகுங்கள்.
தொழுகையை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
குர்ஆனைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
துஆவை விடாதீர்கள்.
அல்லாஹ் நம்மனைவரையும் தன் நிரந்தர பாதுகாப்பில் வைத்தருள்வானாக. ஆமீன்.

Post a Comment

Previous Post Next Post